
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேவிட் மாலன் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் வந்த ஜோ ரூட் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு தொடக்க வீரரான டேவிட் மாலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 28 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் 11, ஜோஸ் பட்லர் 5 , மொயீன் அலி 4 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.