
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - சௌத் சகீல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் சகீல் ஆகியோர் தங்களது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர்.