
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ஒரு ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரஹ்மத் ஷா தவறவிட்டார். அதேசமயம் மறுப்பக்கம் 20 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வேவின் விக்கெட்டை முஜீப் உர் ரஹ்மான் வீழ்த்தி அவரை வழியனுப்பிவைத்தார்.
அதேசமயம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 32 ரன்களை எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா, மறுபக்கம் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த வில் யங் ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் கைப்பற்றி அசத்த, அடுத்து களமிறங்கிய டெரில் மிட்செல் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.