
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா - குயின்டன் டிக் காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடியா கேப்டன் டெம்பா பவுமா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டி காக் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 21ஆவது சதத்தைப் பதிவுசெய்தது அசத்தினார். மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டி காக் அடிக்கும் 4ஆவது சதமாகவும் இது அமைந்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த டி காக் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 114 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.