
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆறு ஓவர்களை கடந்தனர். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய இருவரும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை குவித்தது.
அதன்பின்னும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி இருவரும் போட்டிபோட்டு பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் உலகக்கோப்பை தொடரில் தனது 5ஆவது சதத்தையும், அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் தனது முதல் உலகக்கோப்பை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர்.