
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடக்கமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதனையடுத்து இந்திய அணி தனது 2ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக மெல்பேர்னில் இருந்து சிட்னி சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட சென்றனர். அப்போது தான் அவர்களுக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது பயிற்சியை முடித்த போது, மைதானத்தில் சான்ட்விஜ் மட்டுமே உணவாக தரப்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் மிகவும் தரம் குறைந்து இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த இந்திய வீரர்கள் நேற்று மதியம் உணவை அங்கு புறக்கணித்தனர். மேலும் டி20 உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களில் உபசரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இதுமட்டுமல்லாமல் சிட்னி மைதானத்தில் இருந்து ஹோட்டல் அறை 42 கிமீ தூரம் இருப்பதால் இன்றைய பயிற்சியையும் முழுவதுமாக ரத்து செய்தனர்.