
மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள்.
விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.