
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் நடந்து முடிந்துள்ளது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணியானது 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இதில் முதலிடத்தில் டிராவிச் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.
இதுதவிர்த்து இந்திய அணியைச் சேர்ந்த திலக் வர்மா 4ஆம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். மேற்கொண்டு பாகிஸ்தான் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் 13ஆம் இடத்தில் தொடரும் நிலையில், அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலன் 2 இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.