
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சர்வதேச டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து வருகின்றனர்.
அதேசமயம் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்திற்கு, முகமது ரிஸ்வான் ஒரு இடம் பின் தங்கி 04ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இரண்டு இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிராவிஸ் ஹெட் 06 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 08 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும் பிடித்துளனர்.
அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் முதலிடத்திலும், இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா இரண்டாம் இடத்திலும் நீடித்து வரும் நிலையில், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானும், 4ஆம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்ட்ஜேவும், 5ஆம் இடத்தில் ஃபசல்ஹக் ஃபரூக்கியும் இடம்பிடித்துள்ளனர்.