Advertisement

ஐசிசியின் புதிய வருவாய் பகிர்மான திட்டம்; எதிர்ப்பு தெரிவிக்கும் அசோசியேட் அணிகள்!

சமீபத்தில் ஐசிசி கொண்டுவந்த புதிய் வருவாய் பகிர்மான திட்டத்தை எதிர்த்து அசோசியேட் அணிகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் இது உதவாது என விமர்சன் செய்துள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 31, 2023 • 13:24 PM
ICC revenue model threatens growth of game, associate members say!
ICC revenue model threatens growth of game, associate members say! (Image Source: Google)
Advertisement

ஐசிசியின் புதிய வருவாய் பகிர்மானத் திட்டத்திற்கு அசோசியேட் அணிகளின் வாரியங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வருவாய் பகிர்மான மாதிரி கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவாது என்று அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தப் புதிய வருவாய் மாதிரியில் ஐசிசி-யின் மொத்த வருவாயில் பிசிசிஐ மட்டுமே 38.5% வருவாயைப் பெறும். ஐசிசியின் 12 பிரதான உறுப்பு வாரியங்கள் 88.81% வருவாயை எடுத்துச் செல்ல மீதமுள்ள தொகை 94 அசோசியேட் வாரியங்களுக்காம். இப்படியான சமச்சீரற்ற வருவாய் பகிர்மானத்திற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஐசிசி அசோசியேட் வாரிய உறுப்பினர்களில் ஒருவரான சுமோத் தாமோதர், “அசோசியேட் வாரிய உறுப்பினராக இந்த வருவாய் மாதிரி கடும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. அசோசியேட் வாரியங்களுக்கு ஏன் இந்தத் தொகை மிகமிகச் சிறியது என்பதற்கான ஏகப்பட்ட நடைமுறைக் காரணிகள் உள்ளன. அசோசியேட் அணிகள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அந்தஸ்தைப் பெறும்போது அதனைத் தக்கவைக்க அதிக செலவாகும். இந்த வருவாய்ப் பகிர்மான மாதிரியில் அது நடக்காது” என்கிறார்.

Trending


உதாரணமாக நேபாளம் ஆடவர் கிரிக்கெட்டில் நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. மகளிர் கிரிக்கெட்டில் தாய்லாந்து நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்த இரண்டு வாரியங்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஐசிசியின் இந்த வருவாய் மாதிரி நிச்சயம் போதாது. கிரிக்கெட் வளர்ச்சி என்று ஐபிஎல் தொடர்களுக்கு வரி விலக்கு பெறும் பிசிசிஐ ஏன் அசோசியேட் உறுப்பினர்களுக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.

வனுவாட்டு நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைமைச் செயலதிகாரி டிம் கட்லர், இந்த வருமானப் பகிர்மான மாதிரி இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியை மேலும் அகலப்படுத்துகின்றது என்கிறார். பலம் பொருந்திய வாரியங்கள் வருவாயில் பெரும்பங்கை எடுத்துச் செல்வது கிரிக்கெட் வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்ற கேள்வியை இவரும் எழுப்பியுள்ளார்.

அசோசியேட் உறுப்பினர்களின் கவலைகளுக்கு ஐசிசி இன்னும் பதிலளிக்கவில்லை. முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி தெரிவிக்கும் போது, “உலக கிரிக்கெட்டுக்கு பெரிய அச்சுறுத்தல் வருவாய்க்காக ஒரே நாட்டை, அதாவது இந்தியாவை நம்பியிருப்பது பெரிய ரிஸ்க். அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தொலைநோக்கு அடிப்படையில் சீனா கூட ஐசிசிக்கு பெரிய பயன்களைக் கொண்டு வர முடியும்.

உலக கிரிக்கெட்டுக்குத் தேவை வலுவான வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள். ஜிம்பாப்வே கிரிக்கெட் அழிந்தே விட்டது, காரணம் நிதிப்பற்றாக்குறைதான். அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் கதியும் இதேதான். இந்த நாடுகளில் முதலீடு செய்யத் தவறும் போது கிரிக்கெட்டை தொடர்ந்து தக்க வைக்க முடியாது” என்று கூறியுள்ளார.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement