இலங்கை மகளிர் - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி நவி மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குனரத்னே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹாசினி பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹாசினி பெரேரா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அதேசமயம் 46 ரன்களை எடுத்திருந்த சமாரி அத்தபத்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹர்ஷிதா மாதவி, கவிஷா தில்ஹாரி தலா 4 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாசினி பெரேரா 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 85 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீராங்கனைகளில் நிலாக்ஷி டி சில்வா 37 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதன் காரணமாக இலங்கை மகளிர் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் சொர்னா அக்தர் 3 விக்கெட்டுகளையும், ரபெயா கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹானா ஹக் 7 ரன்னிலும், ருபியா ஹைதர் ரன்கள் ஏதுமின்றியும், சோபனா மொஸ்டாரி 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.