-mdl.jpg)
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவாகியுள்ளவர் ரிங்கு சிங். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை விளாசி அசத்தினார். 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது களமிறங்கிய ரிங்கு சிங், உடனடியாக ஃபினிஷர் ரோலை எடுத்து கொண்டார்.
விக்கெட்டை காப்பாற்றியதோடு, கட் ஷாட் மூலம் சில பவுண்டரிகளையும் எளிதாக விளாசினார். ரோஹித் சர்மாவை ஒரு பக்கம் அதிரடியாக விளையாட விட்டு, நிதானமாக ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் ஃபினிஷிங் கொடுக்க வேண்டிய நிலை வந்த போது, 18வது ஓவருக்கு பின் சிக்சரை விளாசி தொடங்கினார் ரிங்கு சிங். அதில் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தது பலரையும் மிரள வைத்துள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் அதிக தன்னம்பிக்கை கொண்ட வீரராக உருவாகி வருகிறார் ரிங்கு சிங். தனது திறமை என்ன, பலம், பலவீனம் என்று அத்தனையையும் இளம் வயதிலேயே புரிந்து கொண்டு அதற்கேற்ப களத்தில் திட்டங்களை உருவாக்கி பேட்டிங் செய்வது தான் அவரை தனித்துவமான வீரராக மாற்றியுள்ளது.