
கோலி-ரோஹித் சர்மா இடையே மோதல் போக்கு, ஈகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவது சுனில் கவாஸ்கரை பொறுத்தவரை நம்பகத்தன்மை இல்லாததே. கோலி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகியது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்த விலகல் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதை அம்பலப்படுத்துகிறது என்று கூறியதை கவாஸ்கர் ஏற்கவில்லை.
த்ரோ டவுன் பயிற்சியில் ரோஹித் சர்மாவின் கையில் அடிப்பட்டதோடு, ஹாம்ஸ்ட்ரிங் காயமும் இருப்பதால் டெஸ்ட் தொடரிலிர்ந்து ரோஹித் ஷர்மா விலகினார், உடனேயே மகள் வாமிகாவின் முதல் பிறந்தநாள் தொடர்பாக கோலி தானும் ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக அசாருதீன் நேற்று செய்த ட்வீட்டில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாடமுடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கோலி ஓய்வுஎடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால், அதற்கான கால நேரம்தான் சரியில்லை. இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்த செயல் உறுதிசெய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக்கொடுக்காதவர்கள்” எனத் தெரிவித்தார்.