
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் 150 ரன் இலக்கை 13ஆவது ஓவரிலேயே அடைந்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். மேலும், இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள டு பிளெசிஸுக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் 1 ரன் மட்டுமே வித்தியாசம். இவர் அனைத்து விதமான மைதானங்களிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவரது இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.