ஆசிய கோப்பை 2023: மீண்டும் பழைய நிலைபாட்டை கையிலெடுக்கும் பாகிஸ்தான்!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர் ஒருநாள் போட்டி முறையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான ஜெய்ஷா தெரிவித்தார். ஆசிய கோப்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டியை நடத்தாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
Trending
சில நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கூட்டம் நடந்தது. இதில் ஆசிய கோப்பை போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா மோதும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்துவதற்கான யோசனை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜம் சேத்தி அதிரடியானக் கருத்து ஒன்றை அறிவித்துள்ளார். அதில் “பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை அனுப்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது” எனக் கூறியுள்ளார்.
இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் நான்கு போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த சம்மதித்தால், மீதமுள்ள போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த பாக். கிரிக்கெட் வாரியம் நடத்த சம்மதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது சம்மந்தமாக பிசிசிஐ யின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now