
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா எலம் நடைபெறவுள்ளது, இதில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசன் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தன்னை தக்கவைக்கவில்லை என்றால், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஆரம்ப விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிங்கு சிங், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் யஷ் தயாள் பந்துகளில் தொடர்ந்து ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக அறிமுகமானர்.