
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை மான்கட் செய்து ஆட்டமிழக்க வைத்தார். இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் மான்கட் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணியினர் மான்கட் செய்துதான் இந்தியா வெற்றி பெற வேண்டுமா? இது போன்ற ஆட்டம் இழக்க செய்ததற்கு இந்திய அணி வெட்கப்பட வேண்டும் என பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில் ஐசிசி விதிக்குட்பட்டு தான் மான்கட் ரன் அவுட் செய்யப்பட்டதாக பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி மான்கட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மான்கட் முறை சரியானது அல்ல. அதனை யாரும் செய்ய வேண்டாம். இப்படி நீங்கள் மான்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க நினைத்தால் இங்கிலாந்திடம் மட்டும் செய்யுங்கள்” என்று பதிலளித்துள்ளார். மேலும் தீப்தி சர்மா குறித்தும் அவர் பாராட்டி இருக்கிறார்.