
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது காயத்தை சந்தித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமானிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயத்தின் தன்மை தீவிரமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்தும் ஃபகர் ஸமான் விலகியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேற்கொண்டு அவருக்கு மாற்றாக மற்றொரு இடது கை தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அந்த அணியில் இளம் வீரர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதனால் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரும் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.