
உள்ளூர் கிரிக்கெட்டின் ‘டான் பிராட்மேன்’ என்ற பெயரைப் பெற்றவர் சர்ஃப்ராஸ் கான். இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ் கான் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து ரசிகர்களில் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் அனுகுமுறையையும் அவர் பெற்றிருந்தது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.
இதனால் இனிவரும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் சர்ஃப்ராஸ் கான் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறுவார் என்ற கருத்துகளும் நிலவிவருகின்றன. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியிலும் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
மேற்கொண்டு இத்தொடருக்காக தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தற்சமயம் உள்ளூர் போட்டிகளில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் புஜ்ஜி பாபு கோப்பை தொடர் மற்றும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளனர். இதில் சர்ஃப்ராஸ் கான் புஜ்ஜிபாபு கோப்பை தொடர் மற்றும் தூலீப் கோப்பை தொடருக்கான அணிகளில் இடம்பிடித்துள்ளார்.