
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வேல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரில் முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதனைப் படைத்தது.
அதிலும் குறிப்பாக லண்டன் ஸ்பிரிட் அணிக்கு கடைசி 5 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இப்போட்டியில் பரபரப்பான சூழ்நிலையிலும் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த தீப்தி சர்மாவின் காணொளியானது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்போட்டி குறித்து தீப்தி சர்மா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடைசி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது அடுத்த பந்தில் போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அணியின் வெற்றியை கடைசி பந்துவரை இழுத்துச் செல்வதற்கு பதிலாக, முடிந்தவரை விரைவாக விளையாட்டை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. விளையாட்டை முடிக்க அந்த பொறுப்பை நானே ஏற்க வேண்டும் என்று நினைத்தேன்.