Advertisement
Advertisement
Advertisement

ஐஎல்டி20 2024: சாம் பில்லிங்ஸ், ரஸா அதிரடியில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!

அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 26, 2024 • 11:16 AM
ஐஎல்டி20 2024:  சாம் பில்லிங்ஸ், ரஸா அதிரடியில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
ஐஎல்டி20 2024: சாம் பில்லிங்ஸ், ரஸா அதிரடியில் நைட் ரைடர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)
Advertisement

இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு அலிஷான் ஷராஃபு - ஆண்ட்ரிஸ் கொஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கொஸ் 4 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய மைக்கேல் கைல் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான அலிஷான் ஷராஃபு 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த சாம் ஹைன் - லௌரி எவான்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இருவரும் இணைந்து 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை வலிமைப்படுத்தினர். அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்கள் எடுத்த நிலையில் சாம் ஹைன் விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லௌரி எவான்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸும் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேக் ஃபிரெசர் - சாம் பில்லிங்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் ஃபிரெசர் 17 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவவிட, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த சாம் பில்லிங்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 67 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா தனது பங்கிற்கு 43 ரன்களைச் சேர்த்ததுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். இதன்மூலம் துபாய் கேப்பிட்ட்லஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement