ஐஎல்டி20 2024: வைப்பர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது கேப்பிட்டல்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொண்டுத்தனர். அதன்பின் பிலிப் சால்ட் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்கள் எடுத்த நிலையில் பிலிப் சால்ட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் 15 ரன்களிலும், கேப்டன் காலின் முன்ரோ 6 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதற்கிடையில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 66 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ஆடம் ஹோஸ் 7 ரன்களுக்கும், சாம் கரன் 17 ரன்களுக்கும், மைக்கேல் ஜோன்ஸ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் மற்றும் வேண்டர் மெர்வ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் டாம் பாண்டன் - மேக்ஸ் ஹோல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பாண்டன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹோல்டன் 8 ரன்களிலும், பென் டங்க் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 57 ரன்கள் எடுத்த நிலையில் சாம் பில்லிங்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தசுன் ஷன்கா 10 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சிக்கந்தர் ரஸா 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 60 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசிப் பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த சிக்கந்தர் ரஸா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now