ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை பந்தாடியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி விளையாடியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் அணிக்கு ஜேமிஸ் ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்க கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 20 ரன்களிலும், ஜோர்டன் காக்ஸ் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக எராஸ்மஸ் 17 ரன்களையும், ஜேமி ஓவர்டன் 25 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா அணி தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா, ஜோ டென்லி ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், ஜான்சன் சார்லஸ் 2 ரன்களுக்கும், சீன் வில்லியம்ஸ் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாம் கொஹ்லர் காட்மோர் - லுயிஸ் கிரிகோரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் 4 பவுண்டரி, 3 சிச்கர்கள் என 39 ரன்கள் எடுத்த நிலையில் டாம் கொஹ்லர் காட்மோர் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்களைச் சேர்த்திருந்த லுயிஸ் கிரிகோரியும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறவ் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜுஹைப் சுபைர் 2 விக்கெட்டுகளையும், அயான் அஃப்சல் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தி ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வேற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜுஹைப் சுபைர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now