
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஜோ கிளார்க்கும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கைல் மேயர்ஸுடன் இணைந்த ரோஸ்டன் சேஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கைல் மேயர்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது.
மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த கைல் மேயர்ஸும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டர் 26 ரன்களையும், சுனில் நரைன் 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் ஆடம் மில்னே, ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.