
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 3 ரன்னிலும், ஆடம் லித் 13 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரெஹான் அஹ்மத் - ஜோர்டன் காக்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ரெஹான் அஹ்மத் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என் 46 ரன்களிலும், ஜோர்டன் காக்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் தனது பங்கிற்கு 36 ரன்களையும், மார்க் அதிர் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா அணி தரப்பில் கேப்டன் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் விளையாடிய ஜான்சன் சார்லஸ், ஜேசன் ராய் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.