
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆடம் ரோஸிங்டன் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆடம் ரோஸிங்டன் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைப், கேப்டன் சிக்கந்தர் ரஸா, நஜிபுல்லா ஸத்ரான், கலித் ஷா, ஷனகா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப்பும் 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ரோவ்மன் பாவெல் மட்டும் ஓரளவு தாக்குபிடித்து 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா மற்றும் முஸ்தஃபா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.