மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு ஹென்றி டேவிட்ஸ் - ஹாசிம் அம்லா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹாசிம் அம்லா 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜேக்ஸ் காலிஸ், ருடோல்ஃப் ஆகியோரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஹென்றி டேவிட்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
பின்னர் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினார். அதில் டேன் விலாஸ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் ராஹுல் ஷர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகாளுடன் 3 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மாஸ்டர்ஸ் அணியில் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய இர்ஃபான் பதன் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - பவன் நெகி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அம்பத்தி ராயுடு 7 பவுண்டரிகளுடன் 41 ரன்களையும், பவன் நெகி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 11 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now