
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் மற்றும் கேப்டன் ஈயன் மோர்கன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மோர்கன் 10 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய டிம் ஆம்ப்ரோஸும் 17 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பில் மஸ்டர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த கையோடு பில் மஸ்டர்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் டேரன் மேடி 15 ரன்களையும், டிம் பிரஸ்னன் 18 ரன்களையும், கிறிஸ் ட்ரெம்லெட் 14 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதனா, பெரேரா, குணரத்னே உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.