
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரானது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இதில் நேற்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அம்பத்தி ராயுடு 5 ரன்னிலும், பவன் நெகி 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் - யுவராஜ் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 42 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யுவராஜ் சிங் அரைசதம் கடந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து கையோடு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஸ்டூவர்ட் பின்னி 36 ரன்களையும், யூசுப் பதான் 23 ரன்களையும், இர்ஃபான் பதான் 19 ரன்களையும் சேர்க்க இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் தோஹர்த்தி, கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.