
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு ஹாசிம் அம்லா மற்றும் மோர்னே வேன் வைக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் வேன் வைக் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆல்விரோ பீட்டர்சன் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஹாசிம் அம்லா அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஜேக் காலிஸும் தனது பங்கிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அரைசதம் கடந்து விளையாடி வந்த ஹாசிம் அம்லாவும் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் டேன் விலாஸ் 28 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்தது. இலங்கை மாஸ்டர்ஸ் தரப்பில் இசுரு உதானா மற்றும் சதுரங்கா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.