
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் - பென் டங்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷேன் வாட்சன் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட நிலையில், மறுபக்கம் களமிறங்கிய பென் டங்க் 15 ரன்னிலும், ஃபெர்குசன் 13 ரன்னிலும், கிறிஸ்டியன் 32 ரன்னிலும், ரியர்டன் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேன் வாட்சன் 48 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷேன் வாட்சன் 9 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 107 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் பென் கட்டின் 18 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. விண்டிஸ் தரப்பில் ஆஷ்லே நர்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜெரோம் டெய்லர், ரவி ராம்பால் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.