எனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதிலும் மிகவும் மகிழ்ச்சி - மெஹிதி ஹசன்!
20 பந்துகள் வரை நான் சந்தித்தால் நிச்சயம் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது என மெஹிதி ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேசம் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 73 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 30 ரன்கள் கூட தொடவில்லை.
இதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அணியானது 46ஆவது ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் வங்கதேச அணி மிகச் சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஓவர்களில் சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோறது சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 136 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
வெற்றிக்கு இன்னும் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சி இருந்ததால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மெஹதி ஹாசன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ரகுமான் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
அதிலும் குறிப்பாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மெஹதி ஹாசன் 39 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 38 ரன்கள் குவித்து இந்திய அணியை வீழ்த்தினார் என்று கூறலாம். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் பேட்டிங்கில் சரியான நேரத்தில் அவர் அளித்த பங்களிப்பின் காரணமாகவும் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அவரே தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய மெஹதி ஹாசன் கூறுகையில், “இந்த போட்டியில் நான் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது. நான் ஒரு விசயத்தை மட்டும் கடைசி வரை யோசித்துக் கொண்டே இருந்தேன். அந்த வகையில் நிச்சயம் என்னால் இந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அதோடு 20 பந்துகள் வரை நான் சந்தித்தால் நிச்சயம் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது.
அதேபோன்று இறுதிவரை நான் மிகச் சிறப்பாக விளையாடி எனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதிலும் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டி என்னால் மறக்க முடியாத ஒரு போட்டியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now