
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயங்களைச் சந்தித்து தொடரிலிருந்து விலகுவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் முகமது ஷமி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினர்.
அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், அதன்பின் மீதமிருந்த 3 போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயங்களைச் சந்தித்து இரண்டாவது போட்டியிலிருந்து விலகினர்.
அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த இருவரும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தே விளையாடுவார்கள் என பிசிசிஐ அறிவித்திருந்தார். ஆனால் இதில் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டாததால் 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.