
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோர் பேட்டிங், பந்துவீச்சில் பட்டையைக் கிளப்பினார்கள். ஸ்ரேயஸ் ஐயர் மீது பவுன்சருக்கு எதிராக திணறுகிறார் என்ற விமர்சனம் இருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டார். டி20 உலகக் கோப்பை அணியில் பும்ரா, தீபக் சஹார் ஆகியோர் காயத்தில் அவதிப்பட்டு வருவதால், அந்த இடத்தை பிடிக்க சிராஜ் மிரட்டலாக முயற்சித்து வருகிறார். இதனால், சிராஜ் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.
இஷான் கிஷன், தவன், கில் போன்றவர்கள் அடுத்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதற்கான ரேசில் பங்கேற்க இத்தொடரை பயன்படுத்தியே ஆக வேண்டும். இதனால், கடைசி போட்டியில் இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.