
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகலில் குவாஹாட்டியில் நடைபெறுகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது பேட்டிங்கை வலுப்படுத்தக்கூடும். வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதனால் இலங்கைக்கு எதிரான தற்போதைய தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் களமிறங்க உள்ளார். இதை நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரோஹித் உறுதி செய்தார். அதேவேளையில் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனை வெளியே அமர வைப்பது துரதிருஷ்டவசமானது என்றும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.