
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.இப்போட்டியின் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கிய ஷஃபாலி வர்மா 10 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 21 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 28 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - தேவிகா வைதியா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தீப்தி சர்மாவும் பவுண்டரிகளை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது.