
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. அதன்படி, கடந்த நவம்பர் 24ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
அதேபோல், நவம்பர் 26 நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய அணியைப் பொருத்தவரை, அடுத்த ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயா் இணைவதால், நடப்பு தொடரில் திலக் வா்மாவுக்கு இந்த ஆட்டம் கடைசி வாய்ப்பாக இருக்கலாம். பேட்டிங்கில் தடுமாறும் திலக் வா்மாவுக்கு பதிலாக நிச்சயம் ஸ்ரேயஸ் ஐயா் பிளேயிங் லெவனில் இணைவாா். எனினும், இந்தியா விளையாடிய கடந்த 12 டி20 ஆட்டங்கள் அனைத்திலுமே திலக் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.