
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றநிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு காமரூன் க்ரீன் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். புவனேஷ்வர் குமார், பும்ரா, அக்ஸர் படேல் ஆகியோரின் பவுலிங்கை பவர்ப்ளேயில் அடித்து நொறுக்கிய கேமரூன் க்ரீன் 19 பந்தில் அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 21 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசி புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.