IND vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ராய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இன்றைய போட்டிகான இந்திய அணியில் நான்கு மாற்றங்களும், ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
Trending
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய அணியின் துணைக்கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுக்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிற்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் - ரிங்கு சிங் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்கள் எடுத்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருடன் இணைந்த ஜித்தேஷ் சர்மாவும் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மிட்டெடுத்தார்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜித்தேஷ் சர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேலும் முதல் பந்திலேயே அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கும் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் பிலீப் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 8 ரன்களுக்கும், பென் மெக்டர்மோட் 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்து அகஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த டிம் டேவிட் - மேத்யூ ஷார்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 19 ரன்களில் டிம் டேவிட்டும், 22 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும் என தீபக் சஹாரின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இறுதிவரை போராடிய கேப்டன் மேத்யூ வெடும் 2 பவுண்டரி, 2 சிக்சர் என 36 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now