
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடக்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், ஆனால் இன்று வெற்றி பெறவில்லை என்றால் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தொடரை தீர்மானிக்கும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும்.
இந்திய அணியை பொருத்தவரை, இந்த ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயா் இணைகிறாா். அவா் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம்பெறுவாா் என்பதால், திலக் வா்மாவுக்கு ஓய்வளிக்கப்படலாம். இதுதவிர பேட்டிங் லைனில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஜெய்ஸ்வால், கெய்க்வாட், இஷான்கிஷன், சூா்யகுமாா் யாதவ், ரிங்கு சிங் என பலம் சோ்க்கும் வீரா்கள் இருக்கின்றனா்.
ஆனால், பௌலிங் வரிசையில் மாற்றம் வரும் என எதிா்பாா்க்கலாம். ஏனெனில், 3ஆவது ஆட்டத்தில் இந்தியா ஏறத்தாழ வெற்றியை நெருங்கிய நிலையில், கடைசி இரு ஓவா்களில் 40 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வெற்றி கை நழுவிப்போனது. அதிலும், 4 ஓவா்களில் 68 ரன்கள் கொடுத்த பிரஷித் கிருஷ்ணா, கடைசி ஓவரில் மட்டும் 21 ரன்கள் கொடுத்திருந்தாா்.