-mdl.jpg)
அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இதில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியை பெற ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரிங்கு சிங் அதிரடியான பினிஷிங்கை தொடர்ந்து வழங்கி வருகிறார். முதல் 3 போட்டிகளில் ரன்களை வாரிக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள், ராய்ப்பூர் போட்டியில் சிக்கனமாக ரன்களை கொடுத்து தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தனர்.