
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 20ஆம் தேதியன்று துவங்கியது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலும் முன்னோட்டமாகவும் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணமாக செய்த தவறுகளை இந்த தொடரில் திருத்திக்கொள்ள களமிறங்குகிறது.
மேலும் பொதுவாகவே சொந்த மண்ணில் நடைபெறும் இதுபோன்ற இருதரப்பு தொடர்களில் சொல்லி அடிக்கும் அணியாக கருதப்படும் இந்தியா இந்த தொடரிலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம் விரைவில் சொந்த மண்ணில் உலக கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியா அதற்கு முன்பாக தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு கை பார்த்து இந்த கோப்பையை வெல்வதற்கு கடுமையான சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.
முன்னதாக உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப் பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. அதில் அறிமுகமான 2017 முதல் 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று இதுவரை மனதில் நிற்கும் அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத ரிஷப் பந்துக்கு பெரும்பாலான ரசிகர்கள் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கே எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுடைய 11 பேர் அணியில் சேர்ப்பதை பார்க்க முடியவில்லை.