-mdl.jpg)
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என களமிறங்கியது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோஹித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் ரனகள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி 34 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். மேலும் தேவைப்படும் நேரங்களில் இருவரும் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் பொறுப்புடன் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தூ அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 39 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.