Advertisement

BAN vs IND, 2nd Test: அஸ்வின், ஸ்ரேயாஸ் கூட்டணியில் தொடரை வென்றது இந்தியா!

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 25, 2022 • 10:57 AM
IND vs BAN 2nd Test: Iyer, Ashwin Take India To A Thrilling 3-Wicket Win; Complete 2-0 Clean Sweep A
IND vs BAN 2nd Test: Iyer, Ashwin Take India To A Thrilling 3-Wicket Win; Complete 2-0 Clean Sweep A (Image Source: Google)
Advertisement

வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயானஇரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Trending


இதனை தொடந்து 2ஆவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 7 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அக்ஸர் படேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்துள்ளது. அக்ஸர் பட்டேல் 26 ரன்னிலும், உனாத்கட் 3 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உனாத்கட் 13 ரன்களிலும், அதிரடி வீரர் ரிஷப் பந்த் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேலும் 34 ரன்களோடு நடையைக் கட்டினார். இதனால் 74 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரவிச்சந்திரன் அஸ்வின் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் ரன்களைச் சேர்க்க இந்திய அணியின் வெற்றியும் கைக்கூடி வந்தது. அதிலும் இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் இந்திய அணி நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement