
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தர். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், அபிஷேக் சர்மா 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் சஞ்சு சாம்சனுடன் இணைந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 23 ரன்களில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.