
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் உத்தேச லெவன் மற்றும் இப்போட்டிகான ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியா அணி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து, தோல்வியையே தழுவாமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் இந்தியை அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நடப்பு உலகக்கோப்பை தொடர் கெட்ட கனவாகவே அமைந்துள்ளது.