
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 75 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய பென் டக்கெட் 28 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுபக்கம் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 8 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 6 ரன்னிலும், ஜே ஓவர்டன் ரன்கள் ஏதுமின்றியும், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.