
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அபாரமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சதமடித்தும் அசத்தினார். இப்போட்டியில் பென் டக்கெட் 153 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது.