
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர். இதில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று (ஜனவரி 31) நடைபெற்றது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மீண்டும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சாகிப் மஹ்மூத் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி 12 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அபிஷேக் சர்மாவுடன் இணைந்த ரிங்கு சிங் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இதில் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கும் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.