
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் நிதானம் காட்ட மறுமுனையில் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்த நிலையில் பில் சால்ட் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 10 பவுண்டரிளுடன் 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.